சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர் கொலை

சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர் கொலை

சண்டிலிப்பாய் பகுதியில் சுவிட்சர்லாந்தில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்த முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வல்லிபுரம் சந்திரசேகரம் (67) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் நீண்டகாலமாக சுவிட்சர்லாந்துவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார்.

கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து நேற்று சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற பொலிஸார், அங்கிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, உடலில் பல வெட்டுக்காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அவை சேதப்படுத்தப்படுவதற்கு முன்னர் பதிவான காட்சிகளில், முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக வீட்டுக்குள் நுழைந்தமை பதிவாகியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், கண்காணிப்பு கமராக்களை சேதப்படுத்திய பின்னர் முதியவரை கொலை செய்து, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், உடற்கூற்று பரிசோதனையின் போது, உயிரிழந்தவரின் உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல பொலிஸ் குழுக்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )