
சீனாவில் கனமழை ; 21 பேர் பலி
சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், அங்கு பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்குகளில் சிக்கி தென்மேற்கு குயிஜவ் மாகாணத்தில் 4 பேரும், தெற்கு ஹுனான் மாகாணத்தில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் மத்திய ஹுபெய் மாகாணத்தின் தாழ்வான கிராமப்பகுதியில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனுடன் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, தென்மேற்குப் பகுதியான குவாங்சி மாகாணத்தில் பண்ணைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் பல வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டிடங்களைச் சூழ்ந்து வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. பல வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

