
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஐந்து செயலாற்றுகை அறிக்கைகளுக்கு அங்கீகாரம்
பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இந்திக அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய ஆளுகை, நீதி மற்றும் சிவல் பாதுகாப்புப் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் ஐந்து செயலாற்று அறிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கு அமைய 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான ஜனாதிபதி செயலகத்தின் செயலாற்று அறிக்கை மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் செயலாற்றுகை அறிக்கை குறித்து குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடல் இடம்பெற்று அங்கீகாரம் அளிக்கப்பட்டது, அத்துடன், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான பிரதமர் செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் குழுவில் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
அத்துடன், பதிவுசெய்யப்பட்ட நில அளவையாளர்களினால் தயாரிக்கப்படும் வரைபடங்களைப் பதிவுசெய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் 2002ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க நில அளவைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித்.பி பெரேரா சமர்ப்பித்த முன்மொழிவு குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித்.பி பெரேரா, முஜிபுர் ரஹுமான், (ஜனாதிபதி சட்டத்தரணி) பைஸர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்ஹ, எம்.கே.எம்.அஸ்லம் மற்றும் மேஜர் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

