
பிரியாவிடை பெறும் கியூபா தூதுவர் மரியாதையின் நிமித்தம் சபாநாயகரைச் சந்தித்தார்
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் அன்ட்ரேஸ் மார்செலோ கொன்ஸலெஸ் கரியிடோ (H.E. Andrés Marcelo González Garrido) இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பிரியாவிடை நிமித்தம் நேற்று (14) சந்தித்தார்.
பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.
இச்சந்திப்பின்போது, தூதுவர் கொன்ஸலெஸ் கரியிடோ அவர்கள் இலங்கையில் தனது நான்கரை வருட பதவிக் காலத்தில் அவருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக சபாநாயகருக்குத் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, அண்மையில் மீள ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தூதுவர் கொன்ஸலெஸ் கரியிடோ அவர்கள் தனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக சபாநாயகர் தனது வாழ்த்தைத் தெரிவித்ததுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு மற்றும் ஒத்துழைப்புப் பிணைப்புகளை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களையும் பாராட்டினார்.
இலங்கையையும் கியூபாவையும் இணைக்கும் நீண்டகால நட்பை அவர் நினைவு கூர்ந்ததுடன், இருதரப்பு ஒத்துழைப்பின் ஆழத்தையும் நேர்மையையும் பலப்படுத்தும் வகையில், தேவையான காலங்களில் கியூபா எப்பொழுதும் இலங்கையுடன் நின்றிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நீண்ட இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை சபாநாயகர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அத்துடன், இலங்கையின் மருத்துவத் துறைக்கு கியூபா நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவிற்காகவும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
தனது மருத்துவத் தொழில் அனுவபத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இலங்கையில் பணியாற்றிய கியூபா மருத்துவர்களின் மனிதநேயம், அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மையைப் பாராட்டினார்.
இலங்கையில் கியூபாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான அழைப்பை கௌரவ சபாநாயகர் விடுத்ததுடன், விவசாயத் துறையில் விரிவாக்கப்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.

