சஜித், நாமல், திலித், அரியநேந்திரன் நேரடி விவாதம்
2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் நாளை (07) நடைபெறவுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையை மேற்கொள்ளும் Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி நாளை (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை அனைத்து முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும்.
இந்த நிகழ்ச்சியானது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அவர்களின் கொள்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
அதற்கமைய, இதுவரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரோஹன ஹெட்டியாராச்சி,
“தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க உட்பட ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களும் விவாதத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பது கடினம் என அவர் தரப்பினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.