“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பின்பற்றி அரச துறையை விரிவுபடுத்த விரும்புகிறேன்”
தாம் நடைமுறைக்கு மாறான தேர்தல் வாக்குறுதிகளை வழங்கமாட்டேன் என்றும் நாட்டின் ஜனாதிபதியாக தேர்வானால் அமுல்படுத்த முடியும் என்ற கொள்கைகளை மட்டுமே முன்வைப்பதாகவும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தெஹிவளையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் அவர், “ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்மாதிரியை பின்பற்றி, அரச துறையை மூலோபாய வேலைத்திட்டத்துடன் விரிவுபடுத்த விரும்புகிறேன். நடைமுறையான கொள்கைகளை மாத்திரமே நாங்கள் முன் மொழிகிறோம் மற்றும் யதார்த்தமாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதைத் தவிர்க்கிறோம்.
அரசு துறையை வலுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தபால் மூல வாக்குப்பதிவு இடம்பெற்று வரும் நிலையில் சம்பளம் உயர்த்தப்பட்டு அரசு ஊழியர்கள் பாராட்டப்பட்டனர். எவ்வாறாயினும், சில அரசியல்வாதிகள் முன்னர் அரச துறை ஊழியர்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்.
அரச துறையை விரிவுபடுத்தியவர் மஹிந்த ராஜபக்ச, அவர் அரசியல் அதிகாரத்தினால் அல்ல, தொலைநோக்கு மற்றும் மூலோபாய வேலைத்திட்டத்தின் மூலம் இதனை சாதித்தார். மாகாண சபைகள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் பட்டதாரிகளை அரசாங்கத் துறையில் ஒருங்கிணைத்தல் ஆகியவை அவரது முயற்சிகளில் அடங்கும்.
நாங்கள் ஆட்சி அமைக்கும் போது, நாட்டுக்கு பாதகமான சட்டமூலங்களை நிறைவேற்றுவதை தவிர்ப்போம். இந்தநாட்டை பிளவுபடுத்த எந்த கட்சியையும் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.