பஸிலின் சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம்
அமெரிக்காவில் பசில் ராஜபக்சவுக்குள்ள சொத்துகள் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தினால் உண்மையான கொள்ளையர்களை கண்டுபிடிக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிஐடி விசாரணையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச மேலும் கூறியவை வருமாறு,
” பஸில் ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் அமெரிக்காவில் உள்ள சில சொத்துகள் தொடர்பில் சில வருடங்களுக்கு முன்னர் நான் வெளியிட்டிருந்த கருத்துகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே சிஐடிக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
வாக்குமூலத்தின்போது இது தொடர்பில் எனது தெளிவுபடுத்தலை வழங்கினேன். சில எழுத்துமூல ஆவணங்களையும் ஒப்படைத்தேன்.
எனவே, கள்வர்களைப் பிடிக்கின்றோம் என நெத்திலி மீன்களைப்பிடிப்பதைவிட உண்மையான கள்வர்களை பிடிக்க வேண்டுமானால் அமெரிக்காவில் உள்ள சொத்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பஸில் ராஜபக்ச தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கும் இருக்காது என நினைக்கின்றேன். எனவே, தகவல்களை பெறவேண்டும்.
நான் அரசியலில் இருக்கின்றேன். ஓய்வுபெறவில்லை. தேவையான நேரங்களில் ஆட்டம் இடம்பெறும்.”என தெரிவித்துள்ளார்.