
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி : சிக்கப்போகும் முன்னாள் அமைச்சர்
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில்,
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயகவை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதுடன், அது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் தற்போது தடுப்பு காவலில் உள்ளார்.
கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் வசிக்கும் ஒரு பெண் உட்பட இரண்டு பெண்கள், வீட்டு வளாகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளின் ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் ஒரு பையில் துப்பாக்கியுடன் நுழைந்தபோது கைது செய்யப்பட்டனர்.
பெண்ணின் பையில் ஒரு தங்கம் மற்றும் வெள்ளி வண்ணம் பூசப்பட்டT56 துப்பாக்கி மற்றும் ஒரு மெகஸினையும் காவல்துறையினர் கண்டுப்பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் 72 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரதான சந்தேக நபர், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவர் எனவும் அவர் தனது சமையல்காரர் மூலம் துப்பாக்கியை தனக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், சம்பவத்தில் தொடர்புடைய சமையல்காரரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
விசாரணைகளில் குறித்த சமையல்காரருக்கு அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயக துப்பாக்கியை வழங்கியதாக தெரியவந்துள்ளது
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸ்ஸநாயகவை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

