
கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை வழக்கில்குற்றவாளிகளின் மனு நிராகரிக்கப்பட்டது
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகள் ,பொது மன்னிப்புக் கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உட்பட ஐந்து குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 20 ஆண்டுகளாகக் குறைக்குமாறும் பொது மன்னிப்புக் கோரியும் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர்நீதிமன்றம் நேற்றுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.
நீதியரசர்கள் குமுதுனி விக்கிரமசிங்க, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்தவழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலை ஆணையர் நாயகம் மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பினர்.
அரசியலமைப்பின்படி, நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது ஜனாதிபதியின் முழுமையான உரிமை என்றும், ஆனால் அத்தகைய மன்னிப்பைக் கோர மனுதாரர்களுக்கு எந்தச் சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், மனுதாரர்கள் தங்கள் மனுக்கள் மூலம் நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைத்துள்ளதுடன், நியாயமானவர்களாக அவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த மனுவை முன்னெடுக்க எந்த சட்ட அடிப்படையும் இல்லாததால், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு மூத்த துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க மேலும் நீதிமன்றத்தைக் கோரினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற் கொண்டு, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள்கொண்ட அமர்வு, ஏகமனதாக முடிவு செய்தது.
கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் கடந்த 1998ஆம் ஆண்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களைக்கொண்ட அமர்வு இந்த மனுதாரர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
தொடர்ந்து இவர்களுக்குமரண தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும், மரண தண்டனையை நிறைவேற்றுவதில்லை என்று அரசாங்கம் கொள்கையளவில் முடிவு செய்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட் டுள்ளதாகவும் மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 20 ஆண்டு சிறைத்தண்டனையாக மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், தண்டனை விதிக்கப்பட்ட 1998ஆம் ஆண்டுமுதல் அதை அமுல்படுத்த வேண்டும் என்றும் மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
அத்துடன், தண்டனை நிறைவேற்றப் படாவிட்டால், ஜனாதிபதி தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டிருந்தது.
1990களின் பிற்பகுதியில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் பாடசாலை மாணவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரை இராணுவத்தினர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டது

