100வது பிறந்த நாளை கொண்டாடிய மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது ,”100 வயதை எட்டியது பயமாக இருக்கிறது ” என்கிறார்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது, தனது 100 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த மலேசியாவின் தற்போதைய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் ஏனைய உலக தலைவர்களுக்கும் அவர் நன்றி கூறினார் .
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமதுவின் 100வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதேவேளை இணைய வழியில் நேற்று அவர் மக்களை சந்தித்து காசா யுத்தம் , சீனா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகள்மீது தமக்குள்ள நல்லெண்ணம் போன்றவற்றை பகிர்ந்துகொண்டார்.
தமக்குக் கேக்குகள், கடிதங்கள், பூக்கள் போன்ற பிறந்தநாள் பரிசுகளை அனுப்பியோருக்கு நன்றி தெரிவித்த மலேசிய முன்னாள் பிரதமர் டொக்டர் மகாதீர், 100 வயதை எட்டியது தமக்கு பயத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார் .
1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி Dr.மகாதீர் முஹம்மது பிறந்தார்.
1964 இல் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கல்வி அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் மகாதீர் முஹம்மது பதவி வகித்துள்ளார்.
மலேசியாவின் நான்காம் மற்றும் ஏழாம் பிரதமராகப் பதவி வகித்தார்.
1981ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டு வரையிலும் பின்னர் 2018ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தார் .
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (UMNO) தலைவராகவும் .அவர் பொறுப்பு வகித்தார்.
விவசாய நாடான மலேசியாவை நவீன, தொழில்மயமான நாடாக மாற்றியதில் முக்கியப் பங்காற்றியதால் மகாதீர் முஹம்மது , “நவீனமயமாக்கலின் தந்தை” (Father of Modernisation) என அழைக்கப்படுகிறார்.
மகாதீர் தமது பதவி காலத்தில் நாட்டில் பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கினார்.வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தார், வரிக் கட்டமைப்பை சீர்திருத்தினார், வர்த்தக தடைகளை குறைத்தார், மற்றும் பல அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கினார்.
1997 ஆசிய நிதி நெருக்கடியின் போது மலேசியாவை விரைவாக மீட்டெடுப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
‘கிழக்கு நோக்கிப் பார்’ (Look East Policy) என்ற கொள்கையை அறிமுகப்படுத்தி ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் வளர்ச்சி மாதிரிகளை சுட்டிக்காட்டி அவற்றை பின்பற்ற ஊக்கப்படுத்தினார்.
டொக்டர் மகாதீர் முகம்மது ,தனது 92 ஆவது வயதில் இரண்டாவது முறையாக மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்து உலகின் மிக வயதான பிரதமர் என்ற சாதனையை படைத்தார்.

