
இஸ்ரேலில் கட்டாய ராணுவத்தில் சேர மறுத்து இளைஞர்கள் போராட்டம் , காசா படுகொலைக்கு எதிர்ப்பு
கட்டாய ராணுவத்தில் சேர மறுத்து இஸ்ரேல் இளைஞர்கள் சிலர்
போராட்டத்தில் ஈடுபட்டனர் .
கடந்த வாரம் நடைபெற்ற இந்த போரட்டத்தில் பங்கேற்ற யோனா ராஸ்மேன் என்ற இளைஞரும் மற்றும் சிலரும் ராணுவத்தில் சேருவதற்கான அழைப்புக் கடிதங்களை எரித்ததாக கூறியதாக பிபிசி தெரிவிக்கின்றது .
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும், தாம் அதற்கு எதிரானவர்கள் என்பதால் இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுப்பதாகவும் யோனா ராஸ்மேன் குறிப்பிட்டார்.
தான் ஆகஸ்ட் 17ஆம் திகதி ராணுவத்தில் சேரவேண்டிய தினம் எனவும் அன்றைய தினம் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய மறுப்பை தெரிவிக்கப் போவதாக யோனா ராஸ்மேன் கூறியதாக பிபிசியின் செய்தி தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் விளைவாக தாம் கைது செய்யப்பட்டு ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிலும் சர்வதேச அளவிலும் தங்களது போராட்டம் அதிகம் கவனத்தை பெற்றுள்ளதாக கூறிய யோனா ராஸ்மேன் இஸ்ரேலின் மிகப்பெரிய செய்தித் தொலைக்காட்சி சேனல் தங்களை எதிரிக்கு உதவுவதாக செய்தி வெளியிட்டதாகவும், இதுவும் தங்கள் மீது மக்களின் கவனத்தை கொண்டு வந்தது எனவும் தெரிவித்தார்.
காஸாவில் இனப்படுகொலை செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

