
பயணிகள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி நாளை வெளியிடப்படுகிறது
அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பயணிகளும் சீட் பெல்ட்களை அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கிறார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலை பஸ்கள் , அலுவலக சேவை போக்குவரத்து பஸ்கள் , சுற்றுலா பஸ்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஏனைய பஸ்களுக்கு சீட் பெல்ட்களைத் தயாரிக்க சுமார் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
சுமார் 2,000 ரூபாயாக இருந்த சீட் பெல்ட்களின் விலை தற்போது ரூ. 5,000 முதல் 7,000 வரை அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் பிமல் ரத்னாயக இதன்போது சுட்டிக்காட்டினார்.
நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த விடயம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
நீண்ட தூர சேவை பஸ்களுக்கு சீட் பெல்ட்களை கட்டாயமாக்குவது குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்ட போது பெரும்பாலும் அனைவரும் தங்கள் ஒப்புதலைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் மாத்திரமின்றி ஏனைய நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் எதிர்காலத்தில் சீட் பெல்ட்களை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

