
மித்தெனியவில் உள்ள ஐஸ் போதைப்பொருளுக்கான இரசாயன கிடங்கில் தோட்டாக்களும் கைகுண்டுகளும் மீட்பு
ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் பல தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டன .
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் சிறப்புப் படை அதிகாரிகள் இன்று மேற்கொண்ட ஆய்வு மற்றும் அகழ்வுப் பணிகளின்போது ,அப்பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்கு அருகில் புதிதாக வெட்டப்பட்ட பள்ளத்தில் இருந்து அதிகாரிகள் குறித்த வெடிபொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகள், T 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 17 தோட்டாக்கள் மற்றும் 12ரக போர வகை துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் மூன்று தோட்டாக்கள் ஆகியவற்றை அப்பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்கு அருகில் புதிதாக வெட்டப்பட்ட பள்ளத்தில் இருந்து அதிகாரிகள் மீட்டனர்.
அண்மையில் தாயலாந்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமன், மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கான மூலப்பொருள் கிடங்கு ஒன்று இருப்பதாக வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் நேற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் தலைவரான கெஹெல் பத்தர பத்மேவிற்கு சொந்தமாக நுவரெலியாவில் உள்ளதாக கூறப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைக்கு இந்த இரசாயன கிடங்கிலிருந்து மூலப்பொருள் கொண்டுசெல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது 50,000 கிலோகிராம் ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .
இந்த காணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பெரிக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார் .
இதேவேளை முன்னாள் பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியின் சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

