
தீவிரமடையும் மின்சார சபை போராட்டம்நேற்று நள்ளிரவு முதல், உற்பத்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 18வது நாளாகவும் தொடர்கின்றது .
இந்நிலையில் , தங்கள் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
நேற்று நள்ளிரவு முதல், உற்பத்தி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
செப்டம்பர் 4 ஆம் திகதி தொடங்கிய வேலைநிறுத்தம் 17 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பில், இதுவரை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தவறிவிட்டதாக CEB பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரசபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோஷல அபேசிங்க, ஊடகங்களுக்கு தகவல் வழங்கியபோது ,
சட்டப்படி வேலை செய்யும் பணிபுறக்கணிப்பின் மூன்றாவது கட்டம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியதாகக் கூறினார்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய தொழிற்சங்கத் தலைவர்கள் இன்று நண்பகல் கூடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்துவது மற்றும் சாத்தியமான அரசாங்கத்தின் கருத்துக்களை மதிப்பாய்வு செய்வது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படும் என்றும் மின்சாரசபை தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்த CEB பொறியாளர்கள் சங்கம் உட்பட மொத்தம் 25 தொழிற்சங்கங்கள் அண்மைக் காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
சுகயீன விடுப்பு போராட்டங்கள், சட்டப்படி வேலை செய்யும் பணிபுறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் என எதிர்ப்பு நடவடிக்கைகளை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள .
பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட 24 கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சியாக, CEB தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, சிரேஷ்ட அதிகாரிகளுடனும், அனைத்து பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடல்களுக்கு அழைப்பு விடுத்தார்.
CEB-யில் 42 தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஏழு தொழிற்சங்கங்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

