
இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
இலங்கையின் மேற்கு ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய பலநாள் மீன்பிடிப் படகில் போதைப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று (02) காலை, குறித்த படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர், அதில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ஹெரோயின் மற்றும் ஐஸ் வகை போதைப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு நேற்று கைப்பற்றப்பட்டது.
இந்நடவடிக்கையில், கடற்படைக்குச் சொந்தமான நீண்ட தூர கப்பல்களை பயன்படுத்தி குறித்த படகை நெருங்கிய கடற்படையினர், அதை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, படகிலிருந்த ஆறு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

