தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து திருடப்பட்ட புறாக்களுடன் சந்தேகநபர் கைது

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து திருடப்பட்ட புறாக்களுடன் சந்தேகநபர் கைது

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து திருடப்பட்ட 32 வெளிநாட்டு புறாக்களில் 15 புறாக்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (06) கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளினால் இந்த 24 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அவர் தெஹிவளை, நெதிமால, டி.பி. ஜயதிலக்க மாவத்தையில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 04ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் பராமரிப்பிற்காக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு புறாக்கள் 32 திருடப்பட்டிருந்தன.

இப்புறாக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போது விமான நிலைய பொலிஸார் பொறுப்பேற்றவை ஆகும்.

விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், நிர்வாகத்தினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது, கல்கிசைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜே. குணசேகரவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நடத்திய நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )