
ஈரானில் அணுசக்தி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டால் அதை முழுமையாக அழிப்பதற்கு அமெரிக்கா தயங்காது
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இடையே சந்திப்பு நடைபெற்றது.
இதில் இஸ்ரேல்–காசா போர், ஈரானின் அணுசக்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய டிரம்ப்,
கடந்த ஜூன் மாதம் ஈரானின் முக்கிய அணுசக்தி உற்பத்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். அந்த தாக்குதலால் ஈரானின் அணுசக்தி உற்பத்தி திறன் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும், ஈரான் மீண்டும் அணுசக்தி திறன்களை கட்டமைக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறு அணுசக்தி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டால் அதை முழுமையாக அழிப்பதற்கு அமெரிக்கா தயங்காது என்றும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், இந்தியா–பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை தாம் தலையிட்டு நிறுத்தியுள்ளதாகவும், அதற்கான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கவில்லை எனவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதுபோன்ற கருத்தை அவர் இதற்கு முன்னர் 70 தடவைகளுக்கும் மேல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதேபோல், தனது தலையீட்டின் மூலம் ரஷியா–உக்ரைன் போரும் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார். ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், உக்ரைன் தனது வீட்டை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியதாக தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதனிடையே, இஸ்ரேல்–காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை விரைவில் எட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ஹமாஸ் அமைப்பு தங்களது ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய போர்கால சூழ்நிலையில் வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் இஸ்ரேல் நாடே அழிந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் எனக் கூறி, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

