
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 871 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது,
339 கிராம் ஹெரோயின், 447 கிராம் ஐஸ், 5 கிலோகிராம் 515 கிராம் கஞ்சா, 4,636 கஞ்சா செடிகள், 6 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 92 கிராம் ஹஷீஷ், 610 போதை மாத்திரைகள், 347 கிராம் 200 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 24 கிலோகிராம் 542 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய 871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மொத்தமாக 888 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீளச்செயல்படுத்தும் நோக்கில் 9 பேரை மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இந்நடவடிக்கைகளின் வெற்றிக்கு முக்கியமானது என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

