
இலங்கைக்கு விரைவில் புதிய நவீன ஹெலிகாப்டர் ஒன்றை கொண்டு வர திட்டமிடும் டட்லி சிறிசேனா
இலங்கையின் முன்னணி தொழிலதிபர் டட்லி சிறிசேனா, இலங்கைக்கு புதிய நவீன ஹெலிகாப்டரை கொண்டு வருவதற்கான தனது நீண்ட நாள் கனவை விரைவில் நிஜமாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் Singapore Airshow 2026 நிகழ்வில் பங்கேற்றிருந்த போது, யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில், டட்லி சிறிசேனா இதனை தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் தொழில்நுட்பம் தொடர்பில் தாம் நீண்ட காலமாக ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்ஷோவை பார்வையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான சிங்கப்பூர் ஏர்ஷோ, இந்த ஆண்டு 10வது முறையாக நடைபெறுகிறது.
இதில் ஏர்பஸ், போயிங் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களுடன், எஸ்.டி. எஞ்சினியரிங், அண்டுரில் இன்டஸ்ட்ரீஸ், ஷீல்ட் ஏ.ஐ போன்ற ட்ரோன் மற்றும் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.
இந்த நிகழ்வின் போது, டட்லி சிறிசேனாவின் பின்னணியில் Bell Textron Inc நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அதனை சுட்டிக்காட்டிய அவர், இலங்கை தற்போது வேகமாக முன்னேறி வருவதாகவும், குறிப்பாக சுற்றுலாத் துறை மீண்டும் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் “என் வாழ்க்கையில் பல கனவுகளை பெரிய தியாகங்களின் மூலம் நிறைவேற்றியுள்ளேன். இப்போது என் அடுத்த கனவு என் பின்னாலேயே இருக்கிறது. ஆனால், இந்த Bell ஹெலிகாப்டரை விட சிறந்த ஹெலிகாப்டரை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே என் அடுத்த கனவு. அந்த கனவை மிக விரைவில் நிஜமாக்குவேன்” என டட்லி சிறிசேனா தெரிவித்துள்ளார்.
டட்லி சிறிசேனாவின் இந்த அறிவிப்பு, இலங்கையின் விமானத்துறையிலும் சுற்றுலா துறையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

