அக்குரெகொட இரட்டைக் கொலை ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்

அக்குரெகொட இரட்டைக் கொலை ; வெளியான அதிர்ச்சி தகவல்கள்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களை பொலிஸாரிடம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று முன்தினம் (21) மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் வைத்து 46 வயதான சுனில் ரஞ்சித் என்பவரை கைது செய்தனர்.

2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்திலிருந்து சட்டப்பூர்வமாக விலகியவராக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியை டி-56 ரக துப்பாக்கியால் சுட்டவர் இவரே என சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் போது, அவர் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கி, அருகிலுள்ள கருவாத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் ஆலோசனையின் பேரில், ஹோமாகம பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன லியனகேவின் மேற்பார்வையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தாம் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலைக்குப் பின்னர், கொட்டாவ பகுதியில் காரிலிருந்து இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் அம்பலாங்கொடைக்கு சென்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையான இவர், “கரந்தெனிய சுத்தா” என அழைக்கப்படும் நபருடன் நேரடி தொடர்பில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி மூலம் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

கொலை செய்த பின்னர், ஒரு இலட்சம் ரூபாய் பணத்தையும் ஹெரோயின் போதைப்பொருளையும் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அந்த நபரிடமிருந்து பணம் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், அவர் குறித்த நபரின் குழுவினருடன் இணைந்து செயல்பட்டாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் பிற கொலைகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதுவரை துப்பாக்கிதாரி உட்பட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )