தாய்லாந்தில் இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு!

தாய்லாந்தில் இரண்டே வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு!

தாய்லாந்தின் வடக்கு நகரமான சியாங் மாயில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான டைகர் கிங்டம் மிருகக்காட்சிசாலையில் கடந்த இரண்டு வாரங்களில் 70க்கும் மேற்பட்ட புலிகள் இறந்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டைகர் கிங்டமுக்கு சொந்தமான இரண்டு மையங்களில் இருந்து 72 புலிகள் இறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புலிகளைத் தொடவும், அவற்றுடன் தொடர்பு கொள்ளவும் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் குறித்த மிருகக்காட்சிசாலையில் 240க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை உணர தங்களுக்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக அந்நாட்டின் தேசிய கால்நடை திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பூனைகள் அல்லது நாய்கள் போன்ற விலங்குகளை விட புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை கண்டறிவது மிகவும் கடினம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில், திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆரம்ப சோதனைகளில், இந்த விலங்குகள் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (CDV) எனப்படும் கடுமையான தொற்றும் வைரஸால் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நாய்களிடையே பரவும் இந்த வைரஸ், விலங்குகளின் சுவாசம், இரைப்பை குடல் மற்றும் நரம்பு மண்டலங்களை கடுமையாக சேதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

புலிகள் போன்ற காட்டு விலங்குகளைத் தொற்றும் போது இது மிகவும் ஆபத்தானதாக மாறும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இறந்த விலங்குகளின் உடல்களை தகனம் செய்து அடக்கம் செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டைகர் கிங்டம் பூங்கா இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நீக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக மேலும் தெரியவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )