
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்துஈராக் வான்பரப்பு மூடப்பட்டது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது.
இதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அந்நாட்டு வான் எல்லை ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து விமானப் போக்குவரத்துகளும் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஈரானிய தலைநகரில் மூன்று பாரிய வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, எர்பில் (Erbil) சர்வதேச விமான நிலையத்தின் விமானச் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேலைத் தொடர்ந்து, ஈராக் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளும் பாதுகாப்பு கருதித் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன.
பல சர்வதேச விமான நிறுவனங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தமது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு “தகுந்த நேரத்தில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என ஈரானிய புரட்சிகர காவற்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் செய்தியைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்வடைந்துள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இரு தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், பிராந்தியப் போரைத் தவிர்க்குமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியா பதற்றத்தைத் தணிக்க இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியா பிராந்தியத்தின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன், மோதல்கள் தீவிரமடைவது குறித்துக் கவலை வெளியிட்டுள்ளது.

