ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெய்னி1939 – 2026

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெய்னி1939 – 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திட்டமிட்ட “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) ராணுவ நடவடிக்கையில் நேற்று தெஹ்ரானின் மையப்பகுதியின் பாஸ்டர் வீதியில் (Pasteur Street) அமைந்துள்ள ஈரானின் உயர் தலைவர் கமேனியின் அலுவலகம் மற்றும் பலத்த பாதுகாப்புமிக்க அவரின் இல்ல வளாகத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் , அதிநவீன ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தின.

மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டபோது ஈரானின் உயர் தலைவர் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இஸ்ரேலின் மொசாட் (Mossad) மற்றும் அமெரிக்க இராணுவ உளவு அமைப்புகள் வழங்கிய துல்லியமான தகவலின் அடிப்படையில், இந்த சந்திப்பு நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல் முன்கூட்டியே தெரியவந்தாக கூறப்படுகிறது.

உயர் தலைவர் கமேனி மற்றும் அதிகாரிகள் கூடிய நிலத்தடி பதுங்கு குழி மீது “பதுங்கு குழிகளின் ஆழத்திற்கு சென்று தகர்க்கும் Bunker Buster ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த வளாகமே தரைமட்டமானது.

தமது அதி நவீன ஆயுதங்களால் அலி காமெய்னி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் .

எனினும் உயர் தலைவரின் உயிரிழப்பை மறுத்த ஈரான் பின்னர் அவர் “தியாக மரணம்” அடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இடிபாடுகளில் இருந்து 87 வயதான அவரின் உடல் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இந்தத் தாக்குதலின் போது உயர் தலைவருடன் இருந்த 7 முதல் 15 உயர்மட்ட அதிகாரிகள், அவரது மகள், மருமகன் மற்றும் பேரன் ஆகியோரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அவரின் மறைவையொட்டி ஈரானில் தற்போது 40 நாட்கள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தாக்குதல்களில் 201 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 747 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒரு ஆரம்ப படாசாலை மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதிகள் மற்றும் துபாயில் உள்ள ‘ஃபேர்மாண்ட்’ (Fairmont) ஹோட்டல் ஆகியவற்றைத் தாக்கியுள்ளது.

அமெரிக்கப் படைகள் நூற்றுக்கணக்கான ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், அமெரிக்கத் தரப்பில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது

உயர் தலைவர் கமேனியின் மறைவு ஈரானில் ஒரு பெரிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் மதப்பற்றுள்ள மக்கள் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் (IRGC), அவரை இஸ்லாமிய விழுமியங்களைப் பாதுகாவலனாக பார்த்தனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குப் பணியாத ஒரு துணிச்சலான தலைவராக அவரைப் பல அரபு நாடுகளின் மக்கள் போற்றினர்.

ஆனால் ஈரானின் இளம் தலைமுறையினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அவரை ஒரு கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதினர்.பெண்களின் ஆடைக் கட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு கடுமையாக ஒடுக்கியது அவர் மீதான வெறுப்பை அதிகரித்ததுடன் அணுசக்தித் திட்டங்களுக்காக அவர் மேற்கொண்ட பிடிவாதமான முடிவுகளால் சர்வதேசத் தடைகள் , பொருளாதார தடைகள் ஏற்பட்டு, ஈரானிய மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தனர்.இது அவர் மீதான வெறுப்பை அதிகரித்தது .

உலகில் அதிகளவில் மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரானை மாற்றியவர் அவர் என்ற விமர்சனம் அவர் மீது ஒரு தரப்பினரால் முன்வைக்கப்பட்டது .

அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை வளங்கள் மீது பேராசை கொண்டுள்ளதாகவும், 1979-க்கு முன்னர் ஈரானை ஒரு அடிமை நாடாக வைத்திருந்தது போல மீண்டும் நாட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றம் மறந்த உயர் தலைவர் சாட்டினார்.

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்திய போதும் , ஒருபோதும் கைவிட முடியாது என்பதில் காமேனி உறுதியாக இருந்தார். “அணு ஆயுதம் வைத்திருப்பது தற்காப்புக்கான உரிமை” என்ற கருத்தை அவர் மறைமுகமாகவும், “அமைதி வழி அணுசக்தி” என்பதை நேரடியாகவும் வலியுறுத்தினார்
“ஈரான் எவ்வளவு தூரம் யுரேனியத்தை செறிவூட்ட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்?” என்று அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார்.

நேற்றைய அவரின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஒரு இடைக்கால ஆட்சிக்குழு அமைக்கப்பட்டுள்ளது:

கடந்த 37 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஈரானின் உயர் தலைவராக அயதுல்லா அலி கமேனி 1939 ஏப்ரல் 19ஆம் திகதி கிழக்கு ஈரானின் மஷாட் (Mashhad) நகரில் பிறந்தார்.

1979-ல் அமெரிக்க ஆதரவு பெற்ற ஷா மன்னர் முகமது ரேசா பஹ்லவியை பதவியிலிருந்து தூக்கியெறிந்த இஸ்லாமியப் புரட்சியில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

ஈரானின் முதல் உயர் தலைவர் ஆயத்துல்லா ருஹொல்லா கொமேனியின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த இவர், 1981 முதல் 1989 வரை ஈரானின் ஜனாதிபதியாக பதவிவகித்தார்.

1989-ல் ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு, ‘நிபுணர்கள் சபை’ (Assembly of Experts) இவரை புதிய உயர் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

அப்போது அயதுல்லா அலி காமெய்னிக்கு போதுமான மதத் தகுதி (Rank) இல்லாதபோதிலும், இவர் அதிகாரத்தைப் பொறுப்பேற்க வசதியாக அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஈரானை ஆட்சி செய்த கமேனி, நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்:

அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக எப்போதும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில் எதிர்ப்புகள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின்படி, இவரது காலத்தில் மரண தண்டனைகள் அதிகளவில் நிறைவேற்றப்பட்டன.
குறைந்தது 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது..

2025இல் இந்த எண்ணிக்கை 1,000-ஐக் கடந்ததுஉள்ளதாகவும் இது கடந்த 15 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த அளவாகும்.

வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் ஆயுதக் குழுக்கள்
ஈரானின் அதிகாரத்தை அதன் எல்லைகளுக்கு அப்பால் விரிவுபடுத்த கமேனி ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கினார்:

லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள், காசாவின் ஹமாஸ் மற்றும் ஈராக்கின் போராளிக் குழுக்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்களை வாரி வழங்கினார்.

மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஈரானின் செல்வாக்கை நிலைநாட்ட இந்த ஆயுதக் குழுக்கள் அவருக்கு பக்க பலமாய் இருந்தன .

கமேனிக்கு ஆறு பிள்ளைகள் . அவர்களில் சிலர் அரசியல் துறையில் உறுதுணையாக இருந்தனர். உயர் தலைவரின் 37 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஏழு ஜனாதிபதிகள் ஈரானில் பணியாற்றியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )