நாட்டிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கான விசா நீடிப்புசுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டில் வேலைசெய்வோருக்கு அவசர உதவி எண்கள்

நாட்டிலுள்ள சுற்றுலா பயணிகளுக்கான விசா நீடிப்புசுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டில் வேலைசெய்வோருக்கு அவசர உதவி எண்கள்

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு, இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் பிரதி சுற்றுலாத்துறை அமைச்சர் ருவான் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பிராந்திய விமானப் போக்குவரத்துத் தடைகளால் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கக்கூடிய நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற் கொண்டு, தற்போது இலங்கையில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வார கால (14 நாட்கள்) இலவச விசா நீடிப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேவைப்பட்டால் மேலதிக நீடிப்புகள் குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கும், அவசர காலங்களில் விரைவான பதிலளிப்பு பொறிமுறையைச் செயல்படுத்துவதற்கும் வெளிவிவகார அமைச்சு அந்தந்த தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும்.

பல மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்பை மூடியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக மாற்று விமானப் பாதைகளை கண்டறிய வெளிவிவகார அமைச்சும் விமான நிறுவனங்களும் இணைந்து பணியாற்றும்.

மேலதிக சுற்றுலாப் பயணிகள் மாற்று போக்குவரத்து மையங்கள் ஊடாக தடையின்றி இலங்கைக்கு வருவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

24 மணி நேர செயல்பாட்டு மையங்கள்
தற்போது நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) பிரத்யேகப் பிரிவு ஒன்றை நிறுவியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கான 24 மணி நேர அவசர அழைப்பு எண்: 1912

வெளிநாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான தகவல்கள் மற்றும் ஆதரவை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) விசேட செயல்பாட்டு மையத்தை செயல்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 24 மணி நேர அவசர அழைப்பு எண்: 1989

கூடுதலாக, மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை தூதரகங்களுடனும் இணைந்து, அவசர காலங்களில் விரைவாகச் செயல்படவும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் வெளிவிவகார அமைச்சு ஒருங்கிணைந்த பொறிமுறையின் கீழ் பணியாற்றி வருகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கை உள்வரும் சுற்றுலா முகவர்கள் சங்கம் (SLAITO) மற்றும் இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )