
‘கிளீன் ஸ்ரீலங்கா’ மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் வழிகாட்டலில் 322 சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் உருவாக்கம்
‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ஒழுக்கமான மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த அணுகுமுறையுடன் நடைமுறைப்படுத்தப்படும் “சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” வேலைத்திட்டம் நேற்று (16) களுத்துறை மாவட்டத்தின் சிவ்தெவிகம கிராமத்தை மையமாகக் கொண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி யின் தலைமையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால், அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம், “தேசத்தை கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்று ஆண்டு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டமானது, ஒரு கிராமத்தின் பௌதிக வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், ஆறு முக்கிய துறைகளின் ஊடாக மக்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய கல்வி மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி,சுகாதாரம் மற்றும் துப்புரவு, சமூக நல்வாழ்வு, கலாசாரம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பிரதான துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படை நோக்கமான ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துதல் மற்றும் சுத்தமான, நிலையான சூழலைப் பேணுவதற்கான தேசிய அர்ப்பணிப்பை கிராமங்களின் கீழ்மட்டம் வரை கொண்டு செல்வதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
முறையான கொள்கை வழிகாட்டலின் கீழ் முழு அரச பொறிமுறையையும் பயன்படுத்தி, நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் உற்பத்தித்திறன் மிக்க மாதிரி அலகாக மாற்றுவதே இந்த வேலைத்திட்டத்தின் இறுதி இலக்காகும்.
களுத்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (கிளீன் ஸ்ரீலங்கா) எஸ்.பி.சி. சுகீஷ்வர, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சுரங்க குணரத்ன, களுத்துறை மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

