
மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்டன் பிரதேச பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் மஸ்கெலியா நகரில் ஆயுர்வேத மூலிகை மருந்துக் கடை ஒன்றை நடத்தி வந்ததுடன், அந்தக் கடைக்கு வரும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 250 என்ற விலைக்கு சட்டவிரோத மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹட்டன் பிரதேச பொறுப்பு உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் கடை சோதனையிடப்பட்டதில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் வேளையில், விற்பனைக்காக கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 648 சட்டவிரோத கஞ்சா கலந்த மாத்திரை பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ. 1,62,000 என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

