
போரில் ஈடுபடுவோரின் வேண்டுதல்களை இறைவன் ஏற்கமாட்டார்
போப் லியோ, குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நிகழ்த்திய உரையில், மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையை எடுத்துரைத்து, போரின் தீமைகள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
போரில் ஈடுபடுபவர்களின் வேண்டுதல்களை இறைவன் நிராகரிப்பார் எனக் கூறிய அவர், மனித இனத்தின் மீது அன்பும் அமைதியும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
இயேசு கிறிஸ்து சிலுவையின் பாதையில் நடந்தவர் என்றும், அவரது வாழ்க்கை முழுவதும் போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரானதென்றும் அவர் குறிப்பிட்டார்.
துன்பங்களையும் மரணத்தையும் சந்தித்த போதிலும், வன்முறைக்கு பதிலாக அன்பும் தியாகமும் கொண்ட பாதையைத் தேர்ந்தெடுத்தவர் இயேசு எனவும் தெரிவித்தார்.
இதனால், வன்முறையிலும் போர்களிலும் ஈடுபட்டு இறைவனை வேண்டுவோரின் பிரார்த்தனைகளை அவர் ஏற்கமாட்டார் என போப் சுட்டிக்காட்டினார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் வேதாகமத்தில், “நீங்கள் பலமுறை வேண்டினாலும் நான் கேட்கமாட்டேன்; உங்கள் கைகள் ரத்தத்தில் தோய்ந்துள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளதையும் அவர் நினைவூட்டினார்.
மேலும், ஜெருசலேம் நகருக்குள் இயேசு கிறிஸ்து நுழைந்த நிகழ்வை எடுத்துக்காட்டிய அவர், அவர் குதிரையில் அல்லாது கழுதையின் மீது வந்தது அமைதி மற்றும் தாழ்மையின் அடையாளம் என விளக்கினார்.
உலகம் முழுவதும் வன்முறை மற்றும் மோதல்களால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை உணர்ந்து, அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் அவர் உலக மக்களிடம் அழைப்பு விடுத்தார்.

