
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்காகஇரண்டு வாரங்களுக்குள் கொண்டுவரப்படும் புதிய சட்டம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக அரசாங்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுப்புக்காவலில் வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு தற்காலிக ஏற்பாடு மாத்திரமே என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது விரைவில் “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கட்டுப்பாட்டுச் சட்டமூலம்” (Organized Crime Control Bill) மூலம் மாற்றீடு செய்யப்படும்.
பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சட்டதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்புவதையோ அல்லது சிறையிலிருந்தபடி தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதையோ தடுப்பதே இந்த புதிய சட்டத்தின் நோக்கமாகும்.
தண்டனை பெற்ற குற்றவாளிகள் சிறையிலிருந்தபடி குற்றங்களை செய்தாலோ அல்லது புதிய குற்றங்களுடன் தொடர்பிலிருந்தாலோ, அவர்களை மீண்டும் பொலிஸ் காவலுக்கு எடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.
சிறைச்சாலைச் சுவர்களுக்குள் இருந்து எவரும் இனி இயங்க முடியாது என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவாக்கு தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் சந்தேக நபர்களின் சொத்துக்களை சர்வதேச ஒத்துழைப்புடன் முடக்குவதற்கும் பறிமுதல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ‘குற்றச் செயல்கள் மூலம் ஈட்டிய வருமானச் சட்டத்தின்’ கீழ்குற்றவாளிகளின் பில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பதுங்கியிருந்த 29 உயர்மட்ட போதைப்பொருள் விநியோகஸ்தர்களைக் கண்டறிந்து கைது செய்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.

