
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24 மணி நேர வேலைநிறுத்தம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (02) காலை 8.00 மணி முதல் நாளை (03) காலை 8.00 மணி வரை 24 மணி நேர அடையாளப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சட்டவிரோத இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தீவில் உள்ள அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இதே பிரச்சினையை முன்வைத்து கடந்த செவ்வாய்க்கிழமையும் 24 மணி நேர அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு வழங்கப்படாததால், மீண்டும் இந்த வேலைநிறுத்தத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமிழ் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வேலைநிறுத்தம் நடைபெறும் காலப்பகுதியில் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் வழக்கம்போல செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

