
இந்திய மீனவர்கள் 25 பேருக்கு விடுதலை
இந்திய மீனவர்கள் 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத காரணத்தால், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
2026-02-19 அன்று இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை மீறி நுழைந்ததாகக் கூறப்படும் நிலையில், குறித்த 25 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத காரணத்தால், அனைத்து 25 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதேவேளை, 2026-02-18 அன்று கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதீபன்

