
ட்ரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரம் இருக்கும் நிலையில், புதிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், முன்வைக்கப்பட்ட புதிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கெய்ரோவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தலைவர் முஜ்தபா பெர்தௌசி பூர் (Mojtaba Ferdousi Pour), AP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்
ஈரான் வெறும் தற்காலிக போர்நிறுத்தத்தை மட்டும் ஏற்காது.
போர் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
மீண்டும் ஒருமுறை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதங்களை ஈரான் கோருகிறது.
ஈரான் தனது இந்த உத்தியோகபூர்வ பதிலை முக்கிய மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் ஊடாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன் நேரப்படி நாளை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 07) இரவு 8.00 மணி தனது இறுதி காலக்கெடு என்பதை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானை “கற்காலத்திற்கு” (Stone ages) தள்ள நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான தெற்கு பார்ஸில் உள்ள முக்கிய பெட்ரோ இரசாயன ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் புரட்சிகர காவற்படையின் (IRGC) இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டனர்.
ஹார்முஸ் நீரிணையை நிர்வகிப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவது குறித்து ஈரானிய மற்றும் ஓமான் நாட்டு அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதுடன் உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்வை சந்தித்துள்ளது.
இராஜதந்திரிகள் கால அவகாசத்தைப் பெற முயற்சிக்கும் அதேவேளையில், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

