
கொழும்பு புறக்கோட்டை மத்தியபஸ் நிலையம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு
நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பஸ் நிலையம் இன்று காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது.
இதன் உத்தியோகப்பூர்வத் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலை 10.00 மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் விரிவான விபரங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய திறப்பு விழாவின் போது அறிவிக்கப்படவுள்ளன.
இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பஸ் தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் – நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளம் நிர்வாக அலுவலகங்களாகவும் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
பயணிகளின் வசதிக்காக புதிய தகவல் மையம் (Information Centre) ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு நவீன சுகாதார மற்றும் மலசலக்கூட வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
பஸ்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட வரிசைப்படுத்தும் பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை விமானப் படையின் பங்களிப்புடன் இந்த பஸ் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 424 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த சூழலும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நவீனமயமாக்கல் பணிகள் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு உயர்தரமான சேவையை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

