
தெற்கில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினை கடத்தியமீன்பிடி படகு உரிமையாளர் கைது
இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு தெற்கே சுமார் 400 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் வைத்து இந்தப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தெனுவன் புதா (Denuwan Putha) எனப்படும் இந்தப் படகிலிருந்து 6 உரைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 150 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 மீனவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த படகின் உரிமையாளரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய நிலை
கைப்பற்றப்பட்ட படகு நேற்று (ஏப்ரல் 17) காலை திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

