
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது
வணிக விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து, அதன் செல்லுபடியாகும் காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் இன்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 47 சீன நாட்டவர்களும், 02 மலேசிய நாட்டவர்களும் மற்றும் ஒரு இந்தியரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தபோது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களை விரைவில் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

