
இந்திய கடற்படை கப்பல் ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
இந்திய கடற்படைக்கு உட்பட்ட ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், கலப்பு வாயு நீர்மூழ்கல் பயிற்சி (Mixed Gas Diving Training) திட்டத்தை முன்னெடுக்க இன்று (22) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இக் கப்பல் வருகையை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.
Diving Support Vessel வகையைச் சேர்ந்த ‘INS NIREEKSHAK’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Sailesh Kumar Tyagi பணியாற்றி வருகிறார்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து கலப்பு வாயு நீர்மூழ்கல் பயிற்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர். இதன் மூலம் இரு நாடுகளின் நீர்மூழ்கல் துறைகளுக்கு இடையில் அனுபவப் பரிமாற்றமும் திறன் மேம்பாடும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையேயான நல்லெண்ணத்தையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகளிலும் கப்பல் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன், இலங்கையின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் அவர்கள் விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

