யேமன் கடல் பகுதியில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

யேமன் கடல் பகுதியில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தல்

யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பல் ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எம்.டி. யுரேகா (MT Eureka) என்ற கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில், கானா துறைமுகத்திற்கு அருகில் வைத்து இக்கப்பல் கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கப்பல் சோமாலியாவை நோக்கி கொண்டு செல்லப்படுவதாக யேமன் கடலோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. கடத்தப்படும் போது இது டோகோ (Togo) நாட்டுக்கொடியின் கீழ் பயணித்துள்ளது.

இந்த கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவை தளமாகக் கொண்ட கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இது 8 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைராவிலிருந்து (Fujairah) புறப்பட்டு, யேமன் கடற்கரையின் அல் முக்கல்லா (Al Mukalla) துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்தது.

கடந்த 10 நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது எரிபொருள் கப்பல் கடத்தல் இதுவாகும். இதற்கு முன்னர் ஏப்ரல் 22ஆம் திகதி, 18,500 எரிபொருள் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற ‘ஹானர் 25’ (Honor 25) என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் நான்கு கடத்தல்களை மேற்கொண்டுள்ளனர். சோமாலியாவின் பரந்த கடற்கரைப் பகுதியில் கடற்கொள்ளை நடவடிக்கைகள் வேகமாக மீண்டும் பரவி வருவதாக கடல்சார் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு முதல் குறைந்து வந்த சோமாலிய கடற்கொள்ளை நடவடிக்கைகள், 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதில் இருந்து மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )