
டீசல் விலை உயர்வு தாக்கம் ; பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்துடன் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டியிருக்கும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்துத் தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு சதவீத அடிப்படையில் அல்லாது, பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் மல்சீரி டி சில்வா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் பலமுறை டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பெற்றோர்களின் சுமையை கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையை முன்னிட்டு செலவுச் சுமை அதிகரித்துள்ளதால், இம்முறை கட்டணத்தை ஓரளவிற்கு உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
“நேற்று நள்ளிரவில் டீசல் விலை 10 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. இத்தனை காலமாக பெற்றோர்களுக்கு சுமையில்லாமல் சேவையை வழங்கி வந்தாலும், தற்போதைய நிலைமையில் செலவுகளை சமாளிக்க கட்டணத்தை மாற்றுவது தவிர வழியில்லை.
எனினும், பெற்றோர்களுக்கு சுமையில்லாத வகையில், பொருத்தமான அளவில் மட்டுமே இந்த உயர்வு மேற்கொள்ளப்படும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

