
முல்லைத்தீவில் காணாமல் போன 2 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்கள் இன்று (04) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து கடந்த (02) ஆம் திகதி காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக சென்ற இந்த இரு மீனவர்களும், நீண்ட நேரமாக கரைக்கு திரும்பாததால் கவலை ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதி மீனவர்கள் உடனடியாக தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதேவேளை, சம்பவம் குறித்து கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் நாள் தேடுதல் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், இரண்டாம் நாளாக இன்று மீண்டும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, குறித்த மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக செயலிழந்திருந்தது தெரியவந்தது. இதனால் அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தேடிச் சென்ற மீனவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்துவந்தனர். அவர்கள் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

