
முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்குமாறு சங்கம் கோரிக்கை
எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமையால் அதற்கு ஈடாக முச்சக்கரவண்டி கட்டணத்தை குறிப்பிட்டளவு அதிக்க வேண்டுமென தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
பெற்றோல் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையையிட்டு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நேற்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘‘முச்சக்கரவண்டிக் கட்டணங்களை நிர்ணயிக்கும் பணி மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் விலையுயர்வைக் கருத்திற்கொண்டு தற்போது இரண்டாவது கிலோமீற்றருக்கு வசூலிக்கப்படும் 90 ரூபாவை, 10 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.
தற்போது முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாவும் அறவிடப்படுகிறது. எனவே, இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தையும் 100 ரூபாவாக உயர்த்துவது அத்தியாவசியமானது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் எரிபொருள் கட்டுப்பாடுகளால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதால், எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“நாங்கள் அன்றாடம் உழைக்கும் வருமானத்தைக்கொண்டே குத்தகை மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துகிறோம். இவை அனைத்தும் முடங்கினால், இந்தத் தொழிலில் உள்ளவர்கள் எங்கே போவார்கள்? அரசாங்கத்தால் ஏன் இது குறித்துச் சிந்திக்க முடியாது? நாங்கள் வேறொன்றும் கேட்கவில்லை.
குறைந்தபட்சம் வாரத்துக்கு 30 லீற்றர் எரிபொருளையாவது வழங்குமாறு நியாயமான கோரிக்கையையே முன்வைக்கிறோம்” என
தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.

