
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் இன்று எழுப்பிய கேள்வி
சுதந்திரத்திற்குப் பிறகான இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட கடன் தீர்வு ஒன்று, சம்பந்தப்பட்ட கடனாளிக்கு அல்லாமல் வேறொரு தரப்பினருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 148 ஆவது சரத்தின்படி, அரச நிதி மீதான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்திற்கு உரியதாக அமைந்து காணப்படுவதனால், தெளிவான பதில்களை எதிர்பார்த்து பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன்.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச கடன் முகாமைத்துவம் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் யாவை? அச்சட்டங்களை அமுல்படுத்துவதற்கான பொறுப்பு எந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன?
2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்கப் பொதுப் படுகடன் முகாமைத்துவச் சட்டம் நிறைவேற்றப்பட்ட திகதி முதல் இன்று வரை, கடன் செலுத்தும் முகாமைத்துவப் பொறுப்புக்கள் இலங்கை மத்திய வங்கிக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் எவ்வாறு மாற்றமடைந்தன என்பதை திகதிகளுடன் விளக்குவீர்களா? - அரச நிதி பற்றிய குழுவிற்கு அறிக்கையிடப்பட்ட பிரகாரம், அமெரிக்க டொலர் மில்லியன் 2.5 மதிப்பிலான தொகை 10 தவணைகளின் போது இழக்கப்பட்டுள்ளன. தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் பிரகாரம், அந்தந்த தவணைகள் செலுத்தப்பட்ட திகதிகள் யாவை?
- இத்தகைய கடன் தீர்வுகளை மேற்கொள்வதற்கான தரப்படுத்தப்பட்ட செயற்பாட்டு நடைமுறைகளின் படிமுறைகள் யாவை ?
ஒவ்வொரு படியிலும் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனம் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அதிகராரிகள் ஒவ்வொரு படிகள் அடிப்படையில் யாவர்?
இந்த தவறான செலுத்துகைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளோர் எந்த படிகளைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்?
அவ்வாறே, இலங்கை தபால் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு செலுத்தப்பட்ட சுமார் 6 இலட்சம் டொலரும் காணமல் போயுள்ளன. அதேபோல், அஸ்வெசும கொடுப்பணவுகளில் இருமுறை பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துங்கள். பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட கடன் தொடர்பான ஆவணங்கள் கூட காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவியுங்கள்.
- இந்த சம்பவம் தெரியவந்த திகதி எது? அன்று முதல் நிதி பிரமாணம் (103–109 மற்றும் 156) இன் பிரகாரம், தனித்தனியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திகதிகளுடன் குறிப்பிட முடியுமா ?
அவற்றிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா ? இன்று வரை இது தொடர்பாக பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதை அரசாங்கம் தவிர்த்தமைக்கு உரிய குறிப்பிட்ட காரணங்கள் யாவை?
ஜனவரியில் நடந்த இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னும் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்தாமையினால், சிவில் சமூக ஆர்வலர்கள் பலர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
- இந்த சம்பவத்தை அறிந்ததைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிதி அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் திகதிகளுடன் வரிசைக் கிரமமாக யாவை?
அவுஸ்திரேலிய நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியை ஒத்த ஒரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில், கட்டண விவரங்கள் மாற்றப்பட்ட விதத்தில் பிரச்சினை காணப்படுகின்றது. இதில் ஏதேனும் சரிபார்ப்புகள் நடந்திருந்தால் அந்த விபரங்களை தயவுசெய்து சபைக்கு சமர்ப்பியுங்கள்.
பொது நிதி பிரமாணங்களின் பிரகாரம், பெரும் தொகையான பணம் செலுத்துகை விவரங்கள் மாற்றப்படும் சந்தர்ப்பங்களில், அவை ஒரு சுயாதீனமான கட்டமைப்பு மூலம் சரிபார்க்கப்பட வேண்டும். 14 கட்டங்கள் இங்கு அமைந்து காணப்பட்டிருந்தும், இது நிகழ்ந்தது எங்ஙனம் என்பது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டியது அவசியமாகும்.
இது வெளிப்படும் வரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்படாமையினால், இது தொடர்பிலும் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
- இந்த சம்பவம் அறியப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முறைப்பாடு செய்யப்பட்ட திகதியும் முறைப்பாட்டு இலக்கமும் யாது?
தற்போது இது தொடர்பான சட்ட அமுலாக்கத்தின் முன்னேற்றம் எவ்வாறு காணப்படுகின்றன? இந்த செலுத்துகை பணச்சலவையாகவோ அல்லது இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழோ வரும் குற்றமாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனவா?
மரணமடைந்த திரு. ரங்க நிஷாந்த ராஜபக்ச இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்பது தொடர்பிலும் தெரியப்படுத்துங்கள்.
- இந்த நிதி காணாமல் போனமையினால், IMF இணக்கப்பாட்டின் பிரகாரம், தொழில்நுட்ப கடன் தவறுகோல் ஒன்று இடம்பெற்றுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா? இந்த நிலைமையிலிருந்து மீண்டு வருவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் எவ்வாறு காணப்படுகின்றன ?
- வரலாற்றில் மிகவும் பாரதூரமான இந்த பொறுப்பற்ற பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பணிகளை மேற்பார்வை மற்றும் முகாமைத்துவம் செய்த பிரதான கணக்கீட்டு அதிகாரி அல்லது கணக்கீட்டு அதிகாரிகள் தமது கடமைகளை புறக்கணித்துச் செயற்பட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
அவ்வாறாயின், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளை தொடர்ந்தும் பதவியில் வைத்திருந்தபடி இது தொடர்பான நியாயமான விசாரணையொன்றை நடத்த முடியும் என்று அரசாங்கம் கருதுகிறதா

