
ஈரான் வெளியுறவு அமைச்சர் சீனா விஜயம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி இன்று (06) காலை சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் உயர்மட்ட தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய சூழ்நிலைகள் மற்றும் உலகளாவிய மூலோபாய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பாதுகாப்பு மற்றும் அரசியல் அபாயங்கள் காரணமாக உலக எண்ணெய் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தருணத்தில் இந்த விஜயம் அமைந்துள்ளதால், இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இம்மாதம் நடைபெறவுள்ள சூழலில், ஈரானிய அமைச்சரின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், பெய்ஜிங் நகரம் தற்போது உலகளாவிய இராஜதந்திர மையமாக மாறியுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறுவது மற்றொரு சிறப்பம்சமாகும்.

