
NPP எனும் ஹேக்கர்களின் அரசாங்கம் அதிநவீன முறையில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது – நாமல்
பிக்பொக்கெட் முறையை விட்டு இப்போது அரசாங்கம் அதிநவீன ஹேக்கர் முறையூடாக மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
“ஹேக்கர்களின் அரசாங்கம்” என தற்போதைய அரசாங்கத்தை வர்ணித்த நாமல் ராஜபக்ஷ, நாட்டில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஹொரணையில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ,
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் ஒருவரின் செயற்பாடுகளினால் 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான மக்கள் பணம் மாயமாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய டொலர் மதிப்புடன் ஒப்பிடும் போது இது பெரிய தொகை என தெரிவித்தார்.
மேலும் நிலக்கரி இறக்குமதி ஊழல், தனியார் வங்கி ஒன்றில் 13 பில்லியன் ரூபா திருடப்பட்டமை, தபால் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றின் நிதி தவறான கணக்குகளுக்கு மாற்றப்பட்டமை மற்றும் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் மாயமாகியுள்ளமை போன்ற விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியன இன்னும் உறக்கத்தில் இருப்பது வேடிக்கையாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் பின்னர் புகையிரத பாதைகளை புனரமைக்க எந்தவொரு உருப்படியான திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், மழையினால் சேதமடைந்த பாதைகளைக் கூட திருத்த முடியாத ஒரு அரசாங்கமே இன்று உள்ளது எனவும் அவர் சாடினார்.
ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடுகள் செய்யுமளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும்நேற்றைய சந்திப்பில் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

