
வியட்நாம் ஜனாதிபதியின் வருகையுடன், இலங்கை – வியட்நாம் நேரடி விமான சேவை நாளை முதல் ஆரம்பம்
வியட்நாம் ஜனாதிபதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை
வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (07) இரவு இலங்கை வந்தடையவுள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாம் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 55வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 இல் ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைகிறது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான வியட்நாமின் அனுபவத்தைப் பெற்று, இலங்கையின் கைத்தொழில் மயமாக்கல் மற்றும் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தலைமையில் வியட்நாம் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.
கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகரம்/ஹனோய் இடையே வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines) மற்றும் வியட்ஜெட் ஏர் (Vietjet Air) ஆகியவற்றின் நேரடி விமான சேவைகளும் உத்தியோகபூர்வமாக நாளை ஆரம்பித்து வைக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு, வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன.
வியட்நாம் ஜனாதிபதி இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்துவார் அத்துடன் கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள ஹோ சி மின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் இரு நாட்டு வர்த்தக மாநாடுகளில் கலந்துகொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இந்த விஜயம் இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச வேலைவாய்ப்பு சந்தையைத் திறக்கவும், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

