
வியட்நாமிடமிருந்து இலங்கைக்கு 100 மெட்ரிக் தொன் உர மானியம்
வியட்நாம் அரசாங்கத்தினால் இலங்கைக்கு 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் சூப்பர் பொஸ்பேட் (Super Phosphate) உரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வியட்நாமிலிருந்து உரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அந்த நாட்டு அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘‘வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான மேதகு டோ லாம் அவர்களையும், அவருடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினரையும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன்.”
புகழ்பெற்ற வியட்நாமிய துறவியான வணக்கத்திற்குரிய பன்னசார தேரரால் வழிநடத்தப்பட்ட உலகளாவிய அமைதிப் பேரணி இலங்கை ஊடாகச் சென்றமை, இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகால நெருங்கிய உறவை மீண்டும் ஒருமுறை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதியின் இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
உலக அரசியல் வரைபடத்தில் வியட்நாமை வெறும் ஒரு நாடாக மட்டும் இலங்கை பார்க்கவில்லை. மாறாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அசைக்க முடியாத பெருமையாகவும், பொருளாதார மாற்றத்தின் வாழும் சாட்சியாகவும் வியட்நாம் போற்றப்படுகிறது. ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம் அளித்த வரலாற்றை அது கொண்டுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

