
30 இலட்சம் ரூபாய் இலஞ்ம் பெற்றுக்கொள்ள முயன்றபோது கைதான குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்
30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் முகமது மொயினுதீன் இன்று (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் பஸ் நிலையம் மற்றும் பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ஒப்பந்தத்தை (Tender) வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக 30 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகவும், மேலதிகமாக மாதாந்தம் தலா 5 இலட்சம் ரூபாயும் கோரியுள்ளதோடு, அதில் 30 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொள்ள முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டார்
தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயரான முகமது மொயினுதீன் நேற்று (08) பத்தரமுல்ல பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குருநாகல் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும்போது எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் சக்தி ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் ஆட்சியை உறுதிப்படுத்தியது.
இதன்போது, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய முகமது மொயினுதீன் ஆதரவு வழங்கியதோடு, அதற்கமையவே அவர் பிரதி மேயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் முகமது மொயினுதீனின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

