மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு – உயிரிழந்த கபில சந்திரசேனவிடமிருந்து 6 கோடி ரூபாயை பெற்றதாக குற்றச்சாட்டு

மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு – உயிரிழந்த கபில சந்திரசேனவிடமிருந்து 6 கோடி ரூபாயை பெற்றதாக குற்றச்சாட்டு

சர்ச்சைக்குரிய எயார்பஸ்கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் இன்றைய தினம் (09) தங்காலை, கார்டன் இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதிக்கு இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும், அப்போது கடிதம் எதுவும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்து 24 மணித்தியாலங்கள் முடிவதற்குள் இந்த கடிதம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 06 எயார்பஸ் A-330 விமானங்கள் மற்றும் 08 எயார்பஸ் A-350 வகை விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நயோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த விசாரணைகளின் போது, தமக்குக் கிடைத்த 02 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தில் 20 மில்லியன் ரூபாயை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் வழங்கியதாக கபில சந்திரசேன தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்து நீதிமன்றில் சத்தியக்கடதாசி ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )