
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து உரிமங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் கடத்தலை ஒடுக்குதல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வியாபாரிகளுக்கிடையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ் மணல் அகழ்வு உரிமங்கள் வழங்கப்படும் என இது குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மேலும் இதுபற்றி கூறும்போது ,
“மணல் உரிமையாளர்களின் தரப்பிலிருந்து அவர்களின் பிரச்சினைகள், கருத்துக்கள் மற்றும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. மணல் விலையை கட்டுப்படுத்துவதற்காக, ஏழை குடும்பங்கள் வீடு கட்டுவதற்கு 3 கியூப் மணலை 50,000 ரூபாவிற்கும், அரசாங்க கட்டுமானப் பணிகளுக்கு 3 கியூப் மணலை 65,000 ரூபாவிற்கும் வழங்கவும், ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு கொண்டு செல்லும் போது ஒரு கிலோமீட்டருக்கு 350 ரூபா மேலதிக கட்டணத்தை அனுமதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், உரிமங்களை வழங்கும் போது அதற்கான சட்ட ரீதியான விடயங்கள் சில புதிதாக வரைவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட செயலாளரின் இறுதி முடிவு மற்றும் மேற்பார்வையின் கீழ் உரிமங்களை வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்படும் என அமைச்சரும் புவியியல் திணைக்கள பணிப்பாளரும் தெரிவித்தனர். இதன் மூலம் உரிமம் வழங்கும் நடைமுறையில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படும் என நாம் நம்புகிறோம்.” என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

