சாய்ந்தமருது மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சாய்ந்தமருது மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சாய்ந்தமருது கடற்பரப்பில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் இன்று (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, மீன்பிடி படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டதால் ஒரு கட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் “எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும்”, “உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள்”, “சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சிலர் சட்டவிரோத முறையில் மீன்களை அதிக அளவில் பிடித்து செல்வதால், உள்ளூர் மீனவர்களின் நாளாந்த வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் முறையிட்டும் இதுவரை நிலையான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் தலையீடு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )