நீர் மூலம் பரவும் நோய்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நீர் மூலம் பரவும் நோய்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலையால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவிலான வெள்ள நீர் படிப்படியாக வடிந்தோடத் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட ஆலோசகர் மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம, வெள்ளப்பெருக்கின் பின்னர் நீர்நிலைகள் மாசுபடுவதன் காரணமாக டெங்கு, எலிக்காய்ச்சல், மஞ்சள்காமாலை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவக்கூடும் என தெரிவித்துள்ளார்.

“மழைக்காலத்தின் ஆரம்பம் பல தீவிர நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் இந்தக் காலப்பகுதியில் முக்கிய அச்சுறுத்தலாக காணப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில்கூட பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலம் வெள்ள நீர் மாசுபடக்கூடும் என்பதால், எலிக்காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பருவமழைக் காலத்தில் குடிநீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நீர்மூல நோய்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த நோய்களின் தாக்கங்கள் உடனடியாக வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால், வெள்ள நீர் வடிந்தோடிய பின்னர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நோய்த்தாக்கங்கள் அதிகரிக்கக்கூடும். எனவே, பொதுமக்கள் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

பாதுகாப்பான குடிநீர் பயன்பாடு, முறையான சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிநபர் சுத்தம் ஆகியவற்றின் அவசியத்தையும் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சேற்று நீரில் நடப்பதைத் தவிர்க்கவும், கொதிக்கவைத்து ஆறவைக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்தவும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )