
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்வி
நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நிலைமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வருமான சமத்துவமின்மையில் காணப்படும் அநிகரிப்பு மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான அழுத்தம் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அரசின் மூலோபாய அணுகுமுறை குறித்து பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறேன்.
- தொடர்ந்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காண்பதற்கான காரணங்கள் யாவை? அது தொடர்பான அரசின் கருத்து நிலைப்பாடும், கொள்கையும் யாதாக அமைந்து காணப்படுகின்றன?
இந்த நிலைமையை கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியை நிலைப்படுத்தவும், ரூபாவின் பெறுமதியை நிலைப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் குறுகிய மற்றும் மத்திய கால நடவடிக்கைகள் யாவை? - நிலவும் பொருளாதார நிலவரத்துக்கு மத்தியில் நாட்டின் மிகப்பெரும்பான்மையான மக்கள் அழுத்தங்களுக்கு ஆளாகி காணப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? ஆமெனில், அந்த அழுத்தத்தை குறைப்பதற்கு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் யாவை?
- நாட்டின் பெரும்பான்மையான மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் குறைந்த வருமானங்களை ஈட்டும் குடும்பங்கள், கடன் சுமை மற்றும் நிதி அழுத்தத்தின் (Debt Trap) பொறியில் சிக்கியுள்ளனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா? ஆமெனில், அதிகப்படியான கடன் சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் யாது?
- தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வறுமை எல்லைக்கோடுகள் தொடர்பாக முன்வைப்பட்டுள்ள அளவீட்டுப் பெறுமான குறி காட்டிகளை மாவட்ட ரீதியாக தனித்தனியாக யாவை என்பதை முன்வைக்க முடியுமா?
தற்போதைய சந்தை விலைகள், வாழ்க்கைச் செலவு மற்றும் குடும்ப வருமானங்களை கணக்கில் கொள்ளும்போது, குறித்த அளவுப் பெறுமானங்கள் யதார்த்தமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற அளவீட்டு குறிகாட்டிகளாகத்தான் அமைந்து காணப்படுகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா?

